தினமணி விமர்சனம் : பாலை

தினமணி விமர்சனம் : பாலை
First Published : 04 Dec 2011 02:48:54 AM IST
Last Updated :
உலகம் முழுவதும் நிகழும் முக்கிய நிகழ்வுகளை, கடந்த காலப் பதிவுகளை உடனுக்குடன் பதிவு செய்வதில் ஹாலிவுட் திரைக்கலைஞர்கள் எப்போதும் முன்னணியில் இருப்பவர்கள் என்றாலும் அவர்களுக்கு நாமும் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில் வெளிவந்திருக்கிறது ம.செந்தமிழனின் "பாலை' திரைப்படம்.
2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்குடி தமிழினத்தின் வரலாற்றைப் பேசும் இந்தப் படத்தில் உட்கருவாக ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை சொல்லியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.
காட்சிக்கு காட்சி விரியும் பழந்தமிழர்களின் பண்பாடும் வாழ்வியலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. உலகின் பெரும்பாலான பகுதிகளில் விலங்குகளை மனிதர்கள் வேட்டையாடிக்கொண்டும் நர மாமிசம் சாப்பிட்டுக்கொண்டும் இருந்த கால கட்டத்தில் தமிழர்கள் வீடு கட்டி, அடுப்பு மூட்டி, சமைத்தும், ஆடு, மாடுகளை மேய்த்தும், விவசாயம் செய்தும் வாழ்ந்து வந்தவர்கள் என்ற அறிமுகத்தோடு படம் தொடங்கும்போதே பார்வையாளர்களுக்கு பரவசம் தொற்றிக்கொள்கிறது.
வடக்கிலிருந்து வரும் வந்தேறிகள், தமிழர்களின் வளமான ஆயக்குடியைக் கைப்பற்றுவதோடு அவர்களின் பெரும் பகுதியினரை அழித்தொழிக்கவும் செய்கின்றனர். எஞ்சியிருப்பவர்கள் முல்லைக்குடி என்றொரு சிற்றூரைக் கட்டமைத்து வாழத் தொடங்குகின்றனர். கால மாற்றத்தில் அங்கே வரவிருக்கும் வறட்சியைச் சமாளிக்க முல்லைக்குடி தமிழர்கள் என்ன செய்தார்கள்? தங்களுக்குச் சொந்தமான வளமான ஆயக்குடியை மீட்டார்களா என்பதுதான் கதை.
வளன், காயாம்பூ, விருத்திரன், முதுவன், அத்தி, அகி, கூத்தன், பாவை, முல்லை என கதாபாத்திரங்களின் பெயர்களே இது ஒரு நல்ல தமிழ்ப் படைப்பு என்பதற்குச் சான்று.
மழைக்குறி பார்த்தல், பரிகட்டையில் மீன் பிடித்தல், ஏறு தழுவுதல், ஆநிரை கவர்தல், மீன் வேட்டை, உடன்போக்கு, எளிமையான திருமணச் சடங்கு, நீர்க்கடிகாரம், ஆமைகள் மூலம் காலநிலை மாற்றத்தை உணருதல், கவன் கல் எறிதல் போன்ற காட்சிகள் - தமிழர்கள் தொன்றுதொட்டு கடைப்பிடித்த அறிவார்ந்த விஷயங்களை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கின்றன.
முல்லைக்குடி தலைவர் விருத்திரன் - முதுவன் இடையே நடக்கும் போர் தொடர்பான வசனங்களில் ஈழத்தின் அவலம் அங்குலம் அங்குலமாக அலசப்பட்டிருக்கிறது.
விருத்திரன் சக வீரர்களிடம் சொல்லும் சிங்கம், புலி விலங்குகளுக்கு இடையே உள்ள வித்தியாசம், சம காலத் தமிழர்களின் அரசியலை அனலாகக் கக்குகிறது. "தலைவர் எங்கே எங்கேன்னு என்னைத் தேடாதே; எதிரி எங்கே எதிரி எங்கேன்னு அவனைத் தேடு' என்கிற தலைவரின் வசனங்கள் நடந்து முடிந்த அவலத்துக்கு வடிகால் தேடுகின்றன.
முதுவனாக வரும் பேராசிரியர் வை.நடராசன், விருந்தினராக வரும் இளையராஜா, வளனாக வரும் சுனில், காயாம்பூவாக வரும் ஷம்மு என எல்லோரும் அவரவர் கதாபாத்திரங்களின் கனம் உணர்ந்து மனமுவந்து நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
வேத் ஷங்கர் சுகவனத்தின் பாடலிசையும் பின்னணி இசையும் படத்துக்குப் பெரிய பலம். சாதாரண 5டி கேனான் கேமராவின் மூலம் காட்சிகளை மிக அற்புதமாகவும் அழகியல்ரீதியாகவும் பதிவு செய்திருக்கும் அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு பிரமாண்ட படங்களுக்கு சவால் விட்டிருக்கிறது.
இயக்குநர் செந்தமிழன் எழுதிய பாடல் வரிகள் சங்க இலக்கியப் பாடல்களைப் படித்த பரவசத்தை ஏற்படுத்துகின்றன.
சில இடங்களில் கதாபாத்திரங்களின் முகங்களைச் சரியாக அடையாளம் காண முடியாத இருட்டான காட்சிகள், போர்க்களத்தில் இரு பிரிவினருக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உடை, ஆங்காங்கே இடம்பெறும் ஆவணப் பட பாணி என சிறு சிறு குறைகள் இருந்தாலும் - இதர விஷயங்கள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஒரு ஜனரஞ்சகமான படமாக "பாலை'யைக் கண்முன் நிறுத்துகின்றன. இறுதிப் போரில் தலைவருக்கு என்ன ஆனது என்பதைச் சொல்லாமல் தவிர்த்து "நாம் வாழும் ஒவ்வோர் அடி மண்ணையும் மீட்க நம் முன்னோர்கள் போராடி இருக்கிறார்கள்' என்ற செய்தியுடன் படம் நிறைவடைகிறது. அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள் செய்ய வேண்டிய, செய்ய மறந்த ஒரு வரலாற்றுப் பதிவை, குறைந்த பொருள்செலவில் தன் முதல் படத்திலேயே செய்துள்ளதன் மூலம் சிறந்த இயக்குநர்கள் பட்டியலில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் செந்தமிழன். "பாலை' - ஆண்டுகள் பன்னிரெண்டுக்கு ஒரு முறை அபூர்வமாகப் பூக்கும் குறிஞ்சி மலர்!
குறைந்த பட்ஜெட்டில் தரமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தைத் திரையிட அதிக திரையரங்குகள் கிடைக்காதது பரிதாபம். பெரிய பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து, அதை ரிலீஸ் செய்து, தொடர்ந்து கையைச் சுட்டுக்கொள்ளும் தயாரிப்பு நிறுவனங்கள் இதுபோன்ற தரமான, எளிய பட்ஜெட் படங்களை வாங்கி வெளியிட்டால் லாபத்தோடு நல்ல பெயரையும் அடையலாம்.
÷சங்கத் தமிழனை இன்றைய தமிழனுக்கு நினைவூட்ட வேண்டும் என்கிற லட்சிய வெறியுடன் எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தைத் தமிழக முதல்வரும் ஏனைய அமைச்சர்களும் மட்டுமல்ல, தமிழக அரசியலில் வலம் வரும் தலைவர்கள் அனைவரும் கட்டாயம் பார்த்தாக வேண்டும். அவர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழனும்தான்!